திரைமொழி · Issue 1
Draft -மரணத்துக்கு ஜிகுனா ஒட்டும் சினிமா
திரையில் ஒரு மரணம்; தியேட்டரை விட்டு வெளியே வரும்போது மனசில் ஒரு நிறைவு. அந்த மரணம் எப்படி திருப்தியாக மாறுகிறது? இரண்டு பரபரப்பான படங்கள், ஒரு பார்வை
சுரேஷ் பாபு · 11 min read

மரணத்தை கதைகள் கையாளும் விதத்தில் ஒரு விசித்திரமான டெக்னிக் இருக்கிறது. அதை ஒருமுறை நீங்கள் கவனித்துவிட்டால், பிறகு உங்கள் கவனத்தில் இருந்து தவறாது.
ஒரு திரைப்படம் யாரோ ஒருவர் இறப்பதைக் காட்டுகிறது—சில நேரங்களில் மிகக் கொடூரமாக, சில நேரங்களில் ஒரு குழந்தையையே. ஆனால் இறுதிக் காட்சிக்குள் வந்துவிடும் போது, அதே திரைப்படம் நமக்குள் ஒரு வெப்பமான உணர்வையோ, வெற்றியுணர்வையோ, மனநிறைவையோ விதைத்துவிடுகிறது.
மரணம் ஒரு மாற்றுப் பொருளாக மாறிவிடுகிறது.
இழப்பாக நுழைந்த ஒன்று, மகிழ்ச்சியாக வெளியேறுகிறது.
இதற்குப் பொருத்தமான சொல்லாக நான் "வெளியேற்றம்" (Discharge) என்பதையே பயன்படுத்துவேன். அந்த மரணத்தின் பாரத்தை நாம் திரையரங்கத்தை விட்டு வெளியே எடுத்துச் செல்ல வேண்டியதில்லை; கதை அதையே தன்னுள் கரைத்துவிட்டு, அதற்குப் பதிலாக ஒரு இனிமையான அனுபவத்தை நமக்குக் கொடுத்து விடுகிறது.
இப்படிப்பட்ட வெளியேற்றம் எப்போதும் தவறு அல்ல. துன்பியல் இலக்கியத்தின் பெரும்பகுதியே இதன் மேல் கட்டப்பட்டுள்ளது. உலகின் சிறந்த கலைப்படைப்புகளில் பலவும் இதே எலும்புக்கூட்டின் மேல் நிற்கின்றன.
எனவே கேள்வி, எந்த விஷயத்தைப் பற்றிப் பேசுகிறது என்பதல்ல.
இருண்ட பொருள்களை கலை பேசுவதில் எந்தத் தவறும் இல்லை.
Crime and Punishment ஒரு கோடாரிக் கொலையை அழகியலாக மாற்றி, இறுதியில் கருணையை நோக்கிச் செல்கிறது. லியூ சிசின் தனது அறிவியல் புனைகதைகளில் முழு நாகரிகங்களையே அழித்துவிடுகிறார்; ஆனால் அதுவும் ஒரு கலை அனுபவமாகவே மாறுகிறது.
உண்மையான கேள்வி வேறு:
இந்த இருளுக்கான விலையை அந்தப் படைப்பு உங்களிடம் வசூலிக்கிறதா? அல்லது அமைதியாக உங்களை மன்னித்துவிடுகிறதா?
இந்த எல்லையின் இரு முனைகளிலும் இரண்டு சமீபத்திய கொலை மர்மத் திரைப்படங்கள் நிற்கின்றன. அவற்றை அருகருகே வைத்துப் பார்த்தாலே அந்த எல்லை எங்கே இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியும்.
படித்தவன், படிக்கப்பட்டவன்
The Sheep Detectives திரைப்படத்தின் கதையை நேரடியாகச் சொன்னால், அது மிகவும் சோகமானதாகவே தோன்றும்.
ஒரு மேய்ப்பன், ஒவ்வொரு இரவும் தனது ஆடுகளுக்குக் புத்தகங்கள் வாசித்துக்காட்டுகிறான், அவனை கொலை துப்பறியும் நாவல்கள்.
பின்னர் ஒருநாள் அவனே கொலை செய்யப்படுகிறான்.
கொலைக் கதைகளை பொழுதுபோக்காக அனுபவித்த மனிதன், தானே ஒரு உண்மையான கொலைக்குப் பலியாகிறான். அவன் கொலை செய்யப்படுவதற்கு அதைத் தவிர வேறு காரணங்கள் இருப்பதாகத் தெரியவிஅல்லை.
இது பீல் குட் கதையின் தொடக்கம் அல்ல.
இது ஒரு டார்க் நகைச்சுவை. வழக்கமான முரண்பாடு—நீ விரும்பியது, இறுதியில் உன்னையே வந்து விழுங்குவது.
ஆனால் இந்தப் படம் அப்படி வெளிப்படுத்தப்படவில்லை.
மாறாக, குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய, மனதை இலகுவாக்கும், அனைவருக்கும் ஏற்ற ஒரு “இனிமையான கொலை மர்மமாகவே” அது நமக்குக் கொடுக்கப்படுகிறது.
இந்த முரண்பாடு மிகவும் சுவாரசியமானது.
ஆனால் அதன் பின்னால் இன்னும் ஆழமான ஒரு உண்மை மறைந்திருக்கிறது.
படத்தின் அந்த உணர்வு, அந்த இருளுக்கு எதிரான ஒன்று அல்ல.
அதே இருளிலிருந்தே அது உருவாக்கப்படுகிறது.
மேய்ப்பன் கதைகளை வெறுமனே வாசிப்பதில்லை.
அவற்றை மற்றவர்களுடன் பகிர்கிறான்.
அந்தப் பகிர்தலே, அவன் இறந்த பிறகு, அவனுடைய ஆடுகளை அவனது கொலையைத் தீர்க்கும் துப்பறிவாளர்களாக மாற்றுகிறது.
அவன் வாழ்நாளில் தந்த பரிசு, அவன் இறந்த பிறகு அவனுக்கே நீதியாகத் திரும்பி வருகிறது.
இது கதைகளில் வரும் வழக்கமான ஒன்று தான்.
நீ உலகிற்குக் கொடுத்தது, ஒருநாள் உன்னைத் திரும்ப வந்து காப்பாற்றும்.
இது நம்மை நன்றாக உணர வைக்கிறது.
ஆனால் மீண்டும் கவனித்துப் பாருங்கள்.
இதுவும் ஒரு தப்பித்தலே.
ஒரு கொலை, ஒரு இனிமையான முடிவாக மாற்றப்படுகிறது.
அந்த இனிமைக்கே எரிபொருளாக அந்த மரணமே பயன்படுத்தப்படுகிறது.
பின்னர் வட்டம் முழுமையடைகிறது.
கொலையை பொழுதுபோக்காக அனுபவித்த மனிதன், உண்மையில் கொலை செய்யப்படுகிறான்.
அந்த உண்மையான கொலையும், மீண்டும் நமக்கே ஒரு பொழுதுபோக்காகத் திரும்ப வருகிறது.
நாம்தான் அந்த ஆடுகள்.
படத்திற்கே இது ஓரளவு தெரியும்.
அதன் தலைப்பே நம்மிடம் அதை சொல்கிறது.
அதனால் இதன் மீது வைக்கப்படும் விமர்சனமும் மென்மையானதாக இருக்க வேண்டும்.
இங்கு அழுத்தம் குறைவானது.
அந்த மரணம், நீதியாகவும் துயரமாகவும் உருமாறுகிறது.
மேலும், இந்த முரண்பாடு படத்திற்கே ஓரளவு தெரிந்திருக்கிறது.
எனவே இந்தப் படத்தை குற்ற உணர்வில்லாமல் ரசிக்கலாம்.
ஆனால் அந்த குற்றமின்மை எந்த அடித்தளத்தின் மேல் நிற்கிறது என்பதை மட்டும் மறந்துவிடக்கூடாது.
மரணத்தை மசாலாவாக ஆக்குதல்
ராட்சசன் இதே இயந்திரத்தைப் பயன்படுத்துகிறது.
ஆனால் இங்கு அழுத்தம் மிகவும் அதிகம்.
அது நம்மை அதிர்ச்சியடையச் செய்ய வேண்டிய அளவுக்கு.
அதிலும் முக்கியமாக, அது தன்னைத் தானே விமர்சித்துக்கொள்ளும் விழிப்புணர்வும் இல்லாமல் இதைச் செய்கிறது.
கதையின் சட்டகத்தை மட்டும் எடுத்துப் பாருங்கள்.
ஒரு இளைஞன், சிறுமிகளைக் கொல்லும் ஒரு தொடர் கொலையாளியைப் பற்றிய திரைப்படம் எடுக்க வேண்டும் என்று கனவு காண்கிறான், முயற்சி செய்கிறான். அது கைகூடவில்லை
சூழ்நிலையால் காவல்துறையில் சேர்கிறான்.
அங்கு உண்மையிலேயே சிறுமிகளைக் கொன்று வரும் ஒரு தொடர் கொலையாளியை எதிர்கொள்கிறான்.
அவன் நாயகனுக்குச் சவால் விடுகிறான்.
இறுதியில் நாயகனின் சொந்த அண்ணன் மகளையே கொடூரமாகக் கொன்றுவிடுகிறான்.
நாயகன் அவனைப் பிடிக்கிறான்.
அதற்குப் பிறகு?
அவன் தனது பழைய கனவிற்குத் திரும்புகிறான்.
அதே—சிறுமிகளைக் கொல்லும் தொடர் கொலையாளியைப் பற்றிய திரைப்படத்தை இயக்க.
இதுவே அவனுடைய கனவு நிறைவேறிய தருணமாகக் காட்டப்படுகிறது. மகிழ்ச்சியாக முடிகிறது. ரசிகர்கள் திருப்தியாக வருகிறார்கள்.
இந்த நிகழ்வுகளின் வரிசையிலேயே முழு குற்றச்சாட்டு அடங்கியுள்ளது.
உண்மையான சிறுமிகளின் சடலங்கள்.
அதன்பிறகு மனநிறைவு.
அதன்பிறகு மீண்டும் அதே சடலங்களை வைத்து பொழுதுபோக்கு உருவாக்கும் கலை.
இதையெல்லாம் ஒரு வெற்றிக் கதையாக படம் கொண்டாடுகிறது.
அண்ணன் மகளின் மரணம் நீண்ட நேரம் நம்மிடம் தங்குவதில்லை.
அது உடனடியாக நாயகனின் வெற்றிக் கதைக்குள் கரைக்கப்படுகிறது.
அவள் ஒரு தனி மனிதராக அல்ல, நாயகனின் கனவை நிறைவேற்ற உதவும் எரிபொருளாக மாறுகிறாள்.
இன்னும் நேரடியாக சொன்னால்—
ஒரு கலைஞனின் படைப்புக்கான மாசாலாவாக அவள் பயன்படுத்தப்படுகிறாள்.
படம் இதைக் கண்டு அஞ்சுவதில்லை.
ஒருவேளை இதை உணரவே இல்லை.
திரைக்கதையின் இறுக்கத்தையும், சுவாரஸ்யத்தையும் பாராட்டும் பலரும், தாங்கள் கைத்தட்டியிருப்பதற்கான உணர்வின் கணத்தை உணரவே இல்லை.
உண்மையில் எது முக்கியமான வேறுபாடு?
இந்த விமர்சனம் நோக்கம் எதுவல்ல என்பதை மறுபடியும் கவனப்படுத்தவேண்டியிருக்கிறது.
இது கொலைகளை திரைப்படங்களில் காட்டக் கூடாது என்பதல்ல.
இருண்ட திரைப்படங்கள் ஒழுக்கமற்றவை என்பதுமல்ல.
கொலை நிகழும் படங்களின் மகிழ்ச்சியான முடிவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதுமல்ல.
குற்றங்களை புனைவுகளில் சித்தரிப்பதும், அதை ஆதரிப்பதும் ஒன்று என சொல்லவில்லை.
அப்படி என்றால் குற்றப் புனைகதைகளும் பெரும்பாலான துன்பியல் இலக்கியங்களும் அழிந்துபோய்விடும்.
என் எதிர்ப்பு மிகவும் நேரடியானது, எளிமையானது
ஒரு படைப்பு, ஒரு மரணத்தின் பாரத்தை அப்படியே தக்கவைத்திருக்கும்போது அது நேர்மையாக இருக்கிறது.
அந்தப் பாரத்தை முழுவதுமாக மகிழ்ச்சியாக மாற்றிவிட்டு, நாம் இலகுவான மனதுடன் வெளியேறும்படி செய்துவிட்டால், அது மலிவாகிவிடுகிறது.
தஸ்தயெவ்ஸ்கி உங்களை ஒருபோதும் விடுவதில்லை.
அவரது நாவலில் குற்ற உணர்வே கதையின் மையம்.
ராட்சசன் அதற்கு நேர்மாறாக, உங்களை முழுமையாக விடுவித்துவிடுகிறது.
அதையும் ஒரு குழந்தையின் சடலத்தின் மீது நின்றபடியே செய்கிறது.
இரண்டு படங்களும், பலியிடப்பட்ட ஒருவர் மீது நிற்கின்றன.
அதுவே இந்த இரண்டு படங்களையும் ஒரே கட்டுரையில் பேச வைக்கிறது.
ஆனால் இதில் இருக்கும் வேறுபாடு ஒரு சிறிய விஷயம் அல்ல.
The Sheep Detectives, ஒருவரின் மரணத்தை மென்மையாக ஆறுதலாக மாற்றுகிறது.
அதற்கு தானே ஓரளவு விழிப்புணர்வும் இருக்கிறது.
அதை ஒரு புன்னகையுடன் மன்னித்துவிடலாம்.
ஆனால் ராட்சசன்?
ஒரு கொடூரமாகக் கொல்லப்பட்ட குழந்தையின் மரணத்தை, மீண்டும் குழந்தைகளின் கொலைகளைப் பற்றிய கதைகளை உருவாக்கும் அதே ஆசைக்கே எரிபொருளாக மாற்றுகிறது.
அதையே மகிழ்ச்சியான முடிவாகக் கொண்டாடுகிறது.
ஒன்று ஒரு கண் சிமிட்டல்.
மற்றொன்று, தானே ஏற்படுத்திய காயத்தை ஒப்புக்கொள்ள மறுக்கும் ஒரு பிடிவாதம்.
இரண்டு படங்களிலும் கவனிக்க வேண்டியது இறுதி முடிச்சு—படம் நம்மை திருப்தியுடன் வீட்டுக்கு அனுப்புவதற்காக இறுதியில் கட்டும் அந்த அலங்கார ஜிகினா ரிப்பன்.
சில நேரங்களில் அந்த ஜினினா, நாம் கண்முன் பார்த்த உண்மையை மறைக்கும் ஒரு மாயம்.
அந்த ஜிகினா எவ்வளவு திறமையாக அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக, அதன் உள்ளே உண்மையில் என்ன இருக்கிறது என்று நாம் கேட்டாக வேண்டும்.
More like this
விளையாட்டு · சுரேஷ் பாபு
நடுவரின் விசில் முடிவு செய்வது விளையாட்டையா வீரரையா
இறுதிப் போட்டி தொடங்கும் முன்பே அர்ஜென்டினா தோற்க வேண்டும் என்று தீர்மானித்த ஒரு நண்பரோடு செய்த உரையாடலும் அதன் பின்னரான சிந்தனைகளும்
16 min read · Issue 1
